நீங்கள் இன்னும் ஒன்றாக வாழும்போது பாதுகாப்பு உத்திகளை வைத்திருத்தல்

எல்லா வகையான காரணங்களுக்காகவும், உங்கள் துணைவரை அல்லது நீங்கள் பகிர்ந்து கொள்ளும் தங்குமிடத்தை விட்டு வெளியேற முடியாமல் போகலாம். உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் பாதுகாக்கவும் முயற்சி செய்யவும் நீங்கள் வைத்திருக்க முடியுமான உத்திகள் உள்ளன. ஆனால் ஏற்கனவே புண்படுத்தக்கூடிய அல்லது கட்டுப்படுத்துகின்ற நடத்தையை வெளிப்படுத்திய ஒருவருடன் நீங்கள் ஒருபோதும் பாதுகாப்பாக இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

10/11/2023 அன்று போலீஸ் ஆணையர் Charlotte Huntz ஆல் சரிபார்க்கப்பட்டது

உத்திகள்

நீங்கள் இன்னும் உங்கள் துணைவருடன் அல்லது முன்னாள் துணைவருடன் வாழ்ந்து, அவர் புண்படுத்தக்கூடியநடத்தையை வெளிப்படுத்தினால், நீங்களும் உங்கள் பிள்ளைகளும் முற்றிலும் பாதுகாப்பாக இல்லை என்பதை நினைவில் கொள்ளவும். கடைசி முயற்சியாக, உங்களைப் பாதுகாத்துக் கொள்ள பின்வரும் நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க முடியும்.

  • நீங்கள் அனுபவித்ததைப் பற்றி வெட்கப்படுவது பொதுவானது. ஆனால் அதைப் பற்றி பேசுவதற்கான வலிமையைக் கண்டறிவது மிக முக்கியமான படியாகும்.

    நீங்கள் நம்பக்கூடிய நபர்களையும் யார் உங்களை ஆதரிக்க முடியும் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்:

    • குடும்பத்தினர் 
    • நண்பர்கள்
    • அயல் வீட்டார்
    • சகாக்கள்
    • சுகாதாரப் பராமரிப்பு வல்லுநர்கள்
    • உங்கள் பிள்ளைகளின் ஆசிரியர்கள் 
    • உங்கள் பிள்ளைகளின் பாலர் பாடசாலையில் அல்லது பாடசாலையில் உள்ள மற்ற பெற்றோர்கள்.
  • நீங்கள் நம்பக்கூடிய ஒரு அயல் வீட்டாரைக் கொண்டிருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்:

    • நீங்கள் என்ன அனுபவிக்கிறீர்கள் என்பதை அவர்களிடம் சொல்லுங்கள்
    • நீங்கள் பயன்படுத்தக்கூடிய குறியீட்டுச் சொல்லை அல்லது காட்சிச் சமிக்ஞையை ஒன்றாகத் தேர்வு செய்யவும்
    • இந்தக் குறியீட்டைப் பயன்படுத்தினால், என்ன செய்வது என்பதை இருவரும் சேர்ந்து முடிவு செய்யுங்கள், உதாரணமாக எண் 17ல் போலீஸை அழைத்தல்.
  • இது உங்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்காவிட்டாலும் கூட, உங்கள் வீட்டில் பாதுகாப்பான இடங்களைக் கண்டறிவது அல்லது உருவாக்குவது முக்கியமானதாகும்:

    • கத்திகள், கத்தரிக்கோல்கள் மற்றும் ஏனைய கருவிகள் போன்ற ஆயுதங்களாகப் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்கள் அல்லது பொருட்கள் இல்லாத அறைகள்
    • தேவைப்பட்டால் வெளியேறும் வழிகளைக் கொண்ட அறைகள், உதாரணமாக வெளியில் ஒரு கதவு அல்லது தரை தளத்தில் ஒரு ஜன்னல்
    • 17 இல் காவல்துறையை அழைப்பதற்கு அல்லது 114 மூலம் உங்கள் முகவரியுடன் குறுஞ் செய்தி அனுப்புவதற்காக பூட்டக்கூடிய அறைகள்.
  • உங்கள் பாதுகாப்பிற்கு அவர்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது என்றாலும், உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு முயற்சி செய்ய நீங்கள் எடுக்க வேண்டிய படிகள் உள்ளன: 

    • தொலைபேசியை எப்பொழுதும் உங்களுடன் வைத்திருக்கவும், இதனால் ஒரு அவசர நிலையில் உங்களுக்கு நெருக்கமான ஒருவரை அல்லது காவல்துறையை நீங்கள் அழைக்க முடியும்
    • கத்திகள், கத்தரிக்கோல்கள் மற்றும் ஏனைய கருவிகள் போன்ற சாத்தியமான ஆயுதங்களைப் பூட்டி வைக்கவும் அல்லது முடிந்தவரை எட்டாத தூரத்தில் வைக்கவும்
    • உங்கள் தொலைபேசி உங்களிடம் இல்லையென்றால், அண்டை வீட்டாரின் உதவியுடன் அல்லது இரவில் திறந்திருக்கும் அருகிலுள்ள பொது இடம் போன்ற காவல்துறையை அழைப்பதற்கான பிற வழிகளைக் கண்டறியவும்
    • உங்கள் துணைவர் உங்களின் சாவியை பறிமுதல் செய்தால், மேலதிகமான சாவிகளை பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்கவும்
    • நீங்கள் திடீரென்று வெளியேற வேண்டியிருந்தால்,உங்கள் காரிற்கு எரிபொருளை நிரப்புவதையும், உங்கள் காரைப் பயன்படுத்தத் தயாராக வைத்திருப்பதையும் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்
    • தாவணி மற்றும் நீண்ட நெக்லஸ் போன்ற அணிகலன்களை கழுத்தில் அணிவதைத் தவிர்க்கவும்
    • நீங்கள் இன்னும் உங்கள் துணைவரை விட்டு வெளியேறத் திட்டமிடவில்லையென்றாலும், நீங்கள் வெளியேற முடிவு செய்யும் நாளுக்க்கான ஏற்பாடுகளைச் செய்யவும் .
  • உங்கள் துணைவரின் வன்முறையான நடத்தையிலிருந்து உங்களால் முடிந்தவரை உங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பது இன்றியமையாததாகும்:

    • ஒரு துஷ்பிரயோகமான சூழ்நிலையில் தலையிட வேண்டாம் என்று உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லவும்
    • உங்கள் துணைவர் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் பாதுகாப்பாக இருக்கக்கூடிய இடத்தைக் கண்டறியவும்
    • அவர்களுடன் ஒரு சமிக்ஞையை அமைக்கவும், இதனால் அவர்கள் எப்போது உதவியை நாட வேண்டும் அல்லது வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதை அறிந்து கொள்வார்கள்
    • எவ்வாறு உதவிக்கு அழைப்பது என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும்.

உதவியை நாடுங்கள்

பிரான்சில், உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், நடைமுறைகளிலும் ஆவணங்களை தயார்படுத்துவதிலும் உங்களுக்கு உதவுவதற்கும் பல சேவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை.

  • இந்த தொலைபேசி ஆலோசனைச் சேவையானது அனைத்து வகையான வன்முறைகளையும் எதிர்கொள்பவர்களுக்காகவும் அவர்களை ஆதரிப்பவர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    • இந்த சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
    • தொலைபேசியில், பயிற்சி பெற்ற ஆலோசகர் உங்கள் பேச்சைக் கேட்டு உங்களுக்கு ஆதரவளிப்பார். அவர்கள் உங்களை அருகிலுள்ள தொடர்புடைய சேவைகளுக்கு உங்களை வழிநடத்த முடியும்.
    • கிடைக்கின்ற மொழிகள்: பிரெஞ்சு. சில வேளைகளில் பின்வரும் மொழிகளும் கிடைக்கின்றன: ஆங்கிலம், அரபு, ஸ்பானிஷ், துருக்கியம், மாண்டரின், சீனம், குர்திஷ், அஸெரி, போலிஷ், ஹீப்ரு, ஃபார்ஸி, சோனின்கே, கிரியோல், கின்யர்வாண்டா, கிருண்டி மற்றும் ஸ்வாஹிலி. தற்போது, துரதிஷ்டவசமாக ​​இந்த மொழிகள் ஒழுங்கற்ற மற்றும் திட்டமிடப்படாத நேரங்களில் கிடைக்கின்றன.
    • தொடர்பு கொள்ளவும்: 3919 க்கு அழையுங்கள, வாரத்தில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம். உங்கள் தொலைபேசி விலைப்பட்டியலில் இந்த அழைப்பு காட்டப்படமாட்டாது.
    • காது கேளாதவர்கள், செவித்திறன் குன்றியவர்கள், மூங்கையம்(Aphasia) அல்லது மொழிக் குறைபாடுகள் உள்ளவர்கள், www.solidaritefemmes.org என்ற இணையதளத்தின் கீழ் வலதுபுறத்தில் உள்ள தொலைபேசி ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சேவையை அணுகலாம்.
  • பிரஞ்சு வதிவிட உரிமை இல்லாத மக்களுக்கும் கூட, அவர்களின் சூழ்நிலை என்னவாக இருந்தாலும், அனைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே காவல்துறையின் பணியாகும். ஒரு போலீஸ் அதிகாரி உங்களுக்கு வாரத்தில் 7 நாட்களும் 24 மணிநேரமும் ஆலோசனை வழங்கவும், உதவி வழங்கவும் முடியும். நீங்கள் நான்கு பிரதான வழிகளில் காவல்துறையை தொடர்பு கொள்ளலாம்:

    • தொலைபேசி மூலம்: இலவச எண் 17ஐ அழைக்கவும். கிடைக்கக்கூடிய மொழிகள்: உரை பெயர்ப்பு அனைத்து மொழிகளிலும் கிடைக்கப்பெறும்.
    • குறுந்தகவல் மூலம்: பிரஞ்சு மொழியில் 114 க்கு SMS அனுப்பவும், உங்கள் சரியான முகவரியைக் குறிப்பிடவும்.
    • ஆன்லைன் மூலம்: chat service. இந்தச் சேவை பல மொழிகளில் கிடைக்கிறது.
    • எந்தவொரு காவல் நிலையத்திற்கும் செல்லவும், அதாவது “commissariat de police” அல்லது “brigade de gendarmerie”. இந்த இணையத்தளத்தில் உங்களுக்கு அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தேடிப்பெறலாம். உங்களுக்குப் பிரஞ்சு மொழி தெரியாது என்றால், அவர்கள் ஒரு உரைபெயர்ப்பாளரைக் கண்டுபிடிக்க வேண்டும், இதற்குச் சிறிது காலம் எடுக்கலாம்.
  • பிரான்சில் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் உங்களுக்கு உதவ இரண்டு சேவைகள் உள்ளன. 

    ஆம்புலன்ஸ் சேவை “Service d’aide médicale urgente (SAMU)” என்றும் அவசர சேவைகள் “pompiers” என்றும் அழைக்கப்படுகின்றன. உங்களுக்கு அவசர மருத்துவக் கவனிப்புத் தேவைப்பட்டால், அவர்கள் உங்களுக்கு விரைவாக உதவலாம் மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு உங்களை அழைத்துச் செல்லலாம்.

    • உயிருக்கு ஆபத்தான அவசரநிலை ஏற்பட்டால், நீங்கள் மாநில சுகாதார காப்பீட்டில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை அல்லது இச் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு செல்லுபடியாகும் வதிவிட உரிமைகள் இருக்க வேண்டிய அவசியமில்லை.
    • அவசரநிலை அல்ல என்று அவர்கள் கருதுவதன் காரணமாகக் கட்டணங்கள் அறவிடப்பட்டால், இந்தக் கட்டணங்கள் உங்கள் மாநில மற்றும் தனியார் உடல்நலக் காப்பீட்டால் ஈடுசெய்யப்படும்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: உரை பெயர்ப்பு அனைத்து மொழிகளிலும் கிடைக்கப்பெறும்.
    • தொடர்பு கொள்ளவும்: 24/7 இல் இலவசமாகக் கிடைக்கக்கூடிய எண் 112ஐ அழைக்கவும்.

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்