வீட்டுத் துஷ்பிரயோகத்தைப் புரிந்துகொள்ளல்

உங்களது துணைவரின் அல்லது முன்னைய துணைவரின் நடத்தை வழமையானதா என நீங்கள் ஆச்சரியப்படலாம். அல்லது உங்களுக்கு அருகிலுள்ள யாராவது ஒருவரை பற்றி நீங்கள் கவலைப்படலாம். வீடுகளில் நிகழ்கின்ற துஷ்பிரயோகம் பற்றி நீங்கள் அறிந்துகொள்வதற்கு உதவக்கூடிய வகையில் இந்த வழிகாட்டல் திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

Assoc உறுதிப்படுத்தியது. 17/11/2023 ஆம் திகதி துணைப் பேராசிரியர் Andreea Gruev-Vintila ஆல் உறுதிப்படுத்தப்பட்டது.

உங்கள் துணைவரிடமிருந்து நீங்கள் வீட்டுத் துஷ்பிரயோகத்தை அனுபவிக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்வது மிகவும் கடினமாக இருக்க முடியும். இது யாருக்கும் ஏற்பட முடியுமென்பதை என்பதைத் தயவு செய்து நினைவில் கொள்ளவும். மூன்று பெண்களில் ஒருவர், அவர்களின் நிதி அல்லது தொழில் நிலைமை எவ்வாறிருப்பினும், தங்கள் வாழ்நாளில் வீட்டுத் துஷ்பிரயோகத்தை எதிர்கொள்கிறார். 

வீட்டுத் துஷ்பிரயோகம் என்பது உடல் ரீதியானது மட்டுமே என்பது பொதுவாக நிலவும் தவறான கருத்தாகும். ஆனால் உங்களின் துணைவர் அல்லது முன்னாள் துணைவர் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும், உங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், அவரின் தீர்மானங்களுக்கு உங்களைக் கீழ்ப்படியச் செய்வதற்கும் அல்லது உங்களை அவரின் மீது சார்ந்திருக்கச் செய்வதற்கும் உத்திகளைப் பயன்படுத்தினால், இது வீட்டுத் துஷ்பிரயோகமாகும். 

உங்கள் துணைவரின் நடத்தை வீட்டுத் துஷ்பிரயோகமா என்பதைப் படிப்படியாகக் கண்டறிய நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.

நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்

நீங்கள் வீட்டுத் துஷ்பிரயோகத்தை அனுபவிக்கிறீர்களா என்பதை அறிவதற்குரிய ஒரு சிறந்த வழி, நீங்கள் எவ்வாறு உணர்கிறீர் என்பதைச் சரிபார்ப்பதாகும்.

வீட்டுத் துஷ்பிரயோகம் என்று கருதப்படும் நடத்தைகளை நீங்கள் அனுபவிக்கும் போது உங்களை நீங்களே சந்தேகிப்பது பொதுவானதாகும். ஆனால் உங்களை நீங்களே நம்ப முயற்சி செய்யுங்கள்: நீங்கள் என்ன அனுபவிக்கிறீர்கள் என்பதையும் அது உங்களை எவ்வாறு உணர வைக்கின்றது என்பதையும் அறிந்த ஒரே நபர் நீங்கள்தான்.

    • நான் அவருடன் இருந்ததால், என் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாக உணர்கிறேன்.
    • நான் எப்போதும் இராஜதந்திரமாக நடந்துகொள்வதாக உணர்கிறேன்.
    • சில நேரங்களில் அவர் என் குழந்தைகளைக் காயப்படுத்துவார் என்று நான் பயப்படுகிறேன்.
    • சில நேரங்களில் நான் அவருக்குப் பயப்படுகிறேன்.
    • எனது வாழ்க்கையில் எனக்குக் கொஞ்சமான தன்னுரிமை உள்ளதென்று உணர்கிறேன்.
    • அவருடனான கூட்டு வாழ்க்கையில் என்னால் முழுமையாகத் தளர்வாக இருக்க முடியாது.
    • அவரிடமிருந்து அழைப்பு அல்லது செய்தி வரும்போது நான் பதற்றமடைகிறேன்.
    • சில நேரங்களில் நான் வீட்டிற்கு வரப் பயப்படுகிறேன்.
    • அவர் வீட்டிற்கு வரும்போது நான் பதற்றமாக உணர்கிறேன்.
    • நாங்கள் ஒன்றாக இருந்ததால் எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து நான் ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன்.
    • நான் தனிமைப்படுத்தப்பட்டவளாக உணர்கிறேன்.
    • நான் பயம் மற்றும் பதற்றம் நிறைந்த ஒரு சூழலில் வாழ்கிறேன்.
    • யதார்த்தத்தைப் பற்றிய எனது நோக்கை இனி என்னால் நம்ப முடியாது என உணர்கிறேன்.
    • நான் அவருடன் இருந்ததால், நான் முட்டாள், அசிங்கமானவள் அல்லது பயனற்றவள் என்று உணர்கிறேன்.
    • நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று நான் நினைத்தாலும் கூட,நான் சில சமயங்களில் எனது நடத்தைக்காக மன்னிப்புக் கேட்கிறேன் அல்லது மன்னிப்பு கேட்கும்படி அவர் என்னிடம் கேட்கிறார்.
    • அவர் என்னை ஒரு பெற்றோராக, மதிப்புத் தருவதில்லை என்று நான் உணர்கிறேன்.
    • அவரின் நடத்தைக்கு நான் அடிக்கடி சாக்குப்போக்குச் சொல்கிறேன். அவரை கட்டுப்படுத்தக்கூடியவராக, உரிமை கொண்டாடக்கூடியவராக,மற்றும்/அல்லது ஆக்ரோஷமானவரா செயற்படக்கூடியவராக மாற்றக்கூடிய விடயங்களை அவர் அனுபவித்திருக்கிறார்.
    • இந்த நிலைமையைப் பற்றி எனக்கு நெருக்கமானவர்களிடம் பேசுவதற்கு நான் வெட்கப்படுகிறேன்.

    இந்தக் கூற்றுக்களில் குறைந்தபட்சம் ஒன்றேனும் நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதற்கு இசைவாக இருந்தால், நீங்கள் உங்களின் துணைவரின் மூலம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீட்டுத் துஷ்பிரயோகத்தை அனுபவித்திருக்கலாம்.

அவர் எவ்வாறு நடந்து கொள்கிறார்

வீட்டுத் துஷ்பிரயோகமென்பது உடல் ரீதியானது மட்டுமல்ல. அது வேறுபட்ட வடிவங்களில் நிகழ முடியும் என்பதுடன் அது உங்கள் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு போன்ற உங்களின் அடிப்படை உரிமைகளையும் வளங்களையும் பறிக்கலாம். 

வீட்டுத் துஷ்பிரயோகத்தின் சிறந்த வரைவிலக்கணம் கட்டாயக் கட்டுப்பாடு ஆகும். இது வேண்டுமென்றே உங்களைச் சார்ந்திருக்க வைத்திருப்பதற்கு, கீழ்ப்படியச் செய்வதற்கு மற்றும்/அல்லது உங்கள் செயல் சுதந்திரத்தைப் பறிக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே நடத்தப்படும் கட்டுப்படுத்துகின்ற, வற்புறுத்துகின்ற அல்லது அச்சுறுத்துகின்ற ஒரு செயலாகும்

இந்த நடத்தைகளின் தன்மை உளவியல் ரீதியானதாக, வாய்மொழிரீதியானதாக, நிதி சார்ந்ததாக, நிர்வாகம் சார்ந்ததாக, பொருள் சார்ந்ததாக, உடல் ரீதியானதாக அல்லது பாலியல் ரீதியானதாக இருக்கலாம்.

  • உளவியல் துஷ்பிரயோகம் பின்வரும் வடிவங்களில் நிகழ முடியும்:

    • உங்களின் நகர்வுகள், செயற்பாடுகள், மின்னஞ்சல்கள், அழைப்புகள் மற்றும்/அல்லது திட்டமிடல்களைக் கண்காணித்தல்
    • உங்களுக்கு நெருக்கமானவர்களை (நண்பர்களை, குடும்பத்தினரை )பார்ப்பதிலிருந்து உங்களைத் தூரமாக்குவது அல்லது தடுப்பது
    • உங்களை உணர்ச்சிரீதியாக அச்சுறுத்தல் 
    • உங்களை மதிக்காமை மற்றும்/அல்லது அவமானப்படுத்துதல்
    • உங்களை மிரட்டுதல் மற்றும்/அல்லது அச்சுறுத்தல் 
    • உங்களுக்கு அடாவடித்தனம் செய்தல்
    • ஒரு பெற்றோராக உங்களை மதிக்காமை
    • உங்கள் கலாச்சாரம், மதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தேர்வுகள் தவறானவை அல்லது அவரின் சொந்த விருப்பங்களை விடத் தாழ்ந்தவை என்று சுட்டிக்காட்டல் அல்லது மறைமுகமாகச் சொல்தல்
    • உங்களை "கேஸ்லைட்" செய்வது, அதாவது தகவல்களைச் சிதைப்பதன் மூலம் அல்லது உங்களிடமிருந்து மறைப்பதன் மூலம் உங்கள் ஞாபக சக்தி, யதார்த்தம் மற்றும் மன ஆரோக்கியம் ஆகியவற்றை கேள்விக்குள்ளாக்குவது.

    மீண்டும் மீண்டும் செய்தால், அவை உறவுக்குள் உளவியல் ரீதியான துஷ்பிரயோகம் ஆகும்.

    இந்தக் கூற்றுக்களை உங்களால் தொடர்புபடுத்த முடியுமா?

    • நான் எதையும் சரியாகச் செய்யவில்லை என்று அவர் சொல்கிறார்.
    • நான் அவரை உண்மையாகவே காதலித்தால், அவர் விரும்பியதை நான் செய்வேன் என்று என்னை உணர்ச்சிவசமாக மிரட்டுகிறார்.
    • அவர் எனது குழந்தைகளுக்கோ அல்லது எனது செல்லப்பிராணிகளுக்கோ தீங்கு விளைவிப்பதாக அல்லது என்னிடமிருந்து அவற்றை பறிப்பதாக அச்சுறுத்துகிறார்.
    • அவரைத் தவிர வேறு யாராலும் என்னைக் காதலிக்க முடியாது என்கிறார்.
    • எனது நண்பர்களையோ குடும்பத்தினரையோ பார்க்கவிடாமல் அவர் என்னைத் தடுத்தார். 
    • நான் அவரை விடுத்து வேறு நபர்களுடன் நேரத்தைச் செலவழித்தால் அல்லது நான் மற்றவர்களுடன் தொடர்பில் இருந்தால் அவர் மிகவும் பொறாமைப்படுவார்.
    • அவர் எனது கண்காணிக்கிறார். நான் எங்கு இருக்கிறேன்,யாருடன் இருக்கிறேன் என்பதை அவர் எப்போதும் அறிய விரும்புகிறார்.
    • அவரின் நடத்தையைப் பற்றி நான் புகார் செய்தால், அது என் தவறு என்று அவர் என்னிடம் கூறுகிறார். 
    • நான் பேசும்போது, ​​நான் அறையில் இல்லாதது போல் என்னைப் புறக்கணிக்கிறார்.
    • நான் விரும்பாத விடயங்களைப் பாலியல் ரீதியாகச் செய்யும்படி என்னை வற்புறுத்தியிருக்கிறார்.
    • சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபடும்படி என்னை வற்புறுத்துகிறார்
    • அவர் என்னை வாய்மொழியாக, பொருள்களால் அல்லது அச்சுறுத்தும் அசைவுகளால் மிரட்டுகிறார், அவை என்னைக் காயப்படுத்தும் என்று நினைக்கத் தூண்டுகின்றன. 

    இந்தக் கூற்றுக்களில் குறைந்தபட்சம் ஒன்றேனும் அவரின் நடத்தைக்கு இசைவாக இருந்தால், நீங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீட்டுத் துஷ்பிரயோகத்தை அனுபவித்திருக்கலாம்.

  • வாய்மொழியிலான துஷ்பிரயோகம் பின்வரும் வடிவங்களில் நிகழ முடியும்:

    • உங்களுக்குக் கட்டளைகளை வழங்குதல்
    • உங்களைப் பார்த்துக் கத்துதல்
    • உங்களை அவமானப்படுத்தல்
    • உங்களை அல்லது உங்கள் குழந்தைகளை அச்சுறுத்தல்.

    இந்தக் கூற்றுக்களை உங்களால் தொடர்புபடுத்த முடியுமா?

    • நான் அசிங்கமானவள் அல்லது அழுக்கானவள் என்று அவர் சொல்கிறார்.
    • எனது குரல் அல்லது உச்சரிப்பு அசிங்கமானது என்று அவர் என்னிடம் கூறுகிறார்.
    • அவர் என்னை தனிப்பட்ட முறையில் அல்லது மற்றவர்கள் முன்னிலையில் சிறுமைப்படுத்துகிறார் அல்லது அவமதிக்கிறார்.
    • அவர் என்னைப் பார்த்துக் கத்துகிறார்

    இந்தக் கூற்றுக்களில் குறைந்தபட்சம் ஒன்றேனும் அவரின் நடத்தைக்கு இசைவாக இருந்தால், நீங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீட்டுத் துஷ்பிரயோகத்தை அனுபவித்திருக்கலாம்.

  • நிதி சார் துஷ்பிரயோகம் பின்வரும் வடிவங்களில் நிகழ முடியும்:

    • உங்கள் நிதிக்கான வளங்களை இழக்கச் செய்தல்
    • உங்கள் பணத்தையும் செலவினங்களையும் கண்காணித்தல்
    • உங்கள் கட்டண முறைகளை பறிமுதல் செய்தல்
    • வேலை செய்வதிலிருந்து உங்களைத் தடுத்தல் அல்லது உங்கள் வேலை நேரத்தைக் குறைக்க உங்களை வற்புறுத்தல்.

    இந்தக் கூற்றுக்களை உங்களால் தொடர்புபடுத்த முடியுமா?

    • குறிப்பாக வேலை அல்லது படிப்பு சம்பந்தமாக நான் சுய தீர்மானங்களை எடுப்பதிலிருந்து அவர் என்னைத் தடுக்கிறார்.
    • அவர் என்னை தொழில் செய்வதிலிருந்துபயிற்சி பெறுவதிலிருந்து அல்லது போக்குவரத்து மேற்கொள்வதிலிருந்து தடுக்கிறார்.
    • அவர் என்னை பிரெஞ்சு பாடங்களை எடுப்பதிலிருந்து தடுக்கிறார்.
    • அவர்கள் எனது செலவினங்களைக் கண்காணிக்கிறார் மற்றும்/அல்லது எனது வங்கி அட்டையையும் காசோலைப் புத்தகத்தையும் வைத்திருக்கிறார்.
    • அத்தியாவசியப் பொருட்களுக்கான பணத்தை நான் பெறுவதை அவர் மறுக்கிறார். அவர் என்னைப் பெறுவதற்கு அனுமதிக்கும் பணம் எனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில்லை.
    • நான் பணம் பெறுவதற்கு அவர் நிபந்தனைகளை விதிக்கிறார். உதாரணமாக, நான் அவரைக் கோபப்படுத்தினால், எனக்குப் பணம் கிடைப்பதை அவர் தடுக்கிறார்.

    இந்தக் கூற்றுக்களில் குறைந்தபட்சம் ஒன்றேனும் அவரின் நடத்தைக்கு இசைவாக இருந்தால், நீங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீட்டுத் துஷ்பிரயோகத்தை அனுபவித்திருக்கலாம்.

  • இதில் பிள்ளைகள் சம்பந்தப்படும் போது, ​​பெரும்பாலான வீட்டுத் துஷ்பிரயோகம் அவர்களைப் பற்றியதாகும். பிள்ளை வளர்ப்புத் தொடர்பான துஷ்பிரயோகம் பின்வரும் வடிவங்களை எடுக்க முடியும்:

    • ஒரு பெற்றோராக உங்களை விமர்சிப்பது அல்லது மதிக்காமை.
    • உங்கள் பிள்ளைகளை வளர்ப்பதை விட்டும் உங்களைத் தடுத்தல்.
    • உங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்க நீங்கள் தலையிடுவதைத் தடுத்தல்.
    • உங்கள் பிள்ளைகளுக்கு ஆபத்தான மற்றும் பயமுறுத்தும் வழிகளில் நடந்துகொள்ளல்.

    இந்தக் கூற்றுக்களை நீங்கள் தொடர்புபடுத்த முடியுமா?

    • உங்கள் பிள்ளைகளைப் பராமரிப்பதை நிறுத்தி, அதற்குப் பதிலாக அவரைப் பராமரிக்குமாறு அவர் கேட்கிறார்.
    • உங்கள் பிள்ளைகளுடன் நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதையும் என்ன செய்யக்கூடாது என்பதையும் அவர் தீர்மானிக்கிறார்.
    • உங்கள் பிள்ளைகள் தொடர்பான அனைத்து முக்கியத் தீர்மானங்களையும் அவர் எடுக்கிறார்: பாடசாலை, சுகாதாரம் போன்றவை.
    • நீங்கள் உங்கள் பிள்ளைகளை வளர்க்க்கும் முறையை அவர் விமர்சிக்கிறார்.
    • நீங்கள் ஒரு கெட்ட நபர் என்று உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்கிறார்.
    • அவருக்குச் சொல்லாமல் உங்கள் பிள்ளைகளுடன் வெளியே செல்வதை அவர் தடை செய்கிறார்.
    • உங்கள் பிள்ளைகள் உங்கள் குடும்பத்தை எப்போது சந்திக்கலாம் என்பதை அவர் தீர்மானிக்கிறார்.
    • அவரை விட்டு விட்டால் உங்கள் பிள்ளைகளை அவர் வைத்துக் கொள்வதாக அச்சுறுத்துகிறார்
    • உங்களுக்கு அங்கவீனமிருப்பதன் காரணமாக அவர் உங்களை ஒரு பெற்றோராக மதிக்காதிருக்கிறார்

    இந்தக் கூற்றுக்களில் குறைந்தபட்சம் ஒன்றேனும் அவரின் நடத்தைக்கு இசைவாக இருந்தால், நீங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீட்டுத் துஷ்பிரயோகத்தை அனுபவித்திருக்கலாம்.

  • நிர்வாகத் துஷ்பிரயோகம் பின்வரும் வடிவங்களில் நிகழ முடியும்:

    • உங்கள் நிர்வாக ஆவணங்களுக்கான அணுகலைப் பறிமுதல் செய்தல் அல்லது நிபந்தனைகளை விதித்தல் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, வதிவு அனுமதி, சுகாதாரப் பராமரிப்பு அட்டை அல்லது"carte vitale", குடும்பப் பதிவுப் புத்தகம் அல்லது "livret de famille", சுகாதாரப் பதிவுப் புத்தகம் அல்லது "carnet de santé", டிப்ளோமாக்கள், வரி அறிவித்தல்கள் போன்றவை.
    • உங்களைப் பற்றி புகாரளிப்பதாகவும் அதனால் நீங்கள் பிரான்சில் இருந்து நாடு கடத்தப்படுவீர்கள் என்றும் மிரட்டல்
    • உங்கள் தொடர்பாடல்களைப் பரீட்சித்தல்: கடிதங்கள், மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள் போன்றவை.

    இந்தக் கூற்றுக்களை உங்களால் தொடர்புபடுத்த முடியுமா?

    • அவர் என்னுடைய அடையாள ஆவணங்களை தன்னிடம் வைத்திருக்கிறார்.
    • அவர் எங்கள் பிள்ளைகளின் அடையாள ஆவணங்களை தன்னிடம் வைத்திருக்கிறார்.
    • எனக்கு வரும் கடிதங்களை அவர் வாசிக்கிறார்.
    • அவரை நான் விட்டு விட்டால் பிரான்சில் இருந்து நாடு கடத்தப்படுவேன் என்று அவர் எச்சரிக்கிறார்.
    • அவர் என்னை விட்டுவிடுவதாகவும் அதன் காரணமாக நான் எனது பிரெஞ்சு வதிவிட உரிமையை இழப்பேன் என்று மிரட்டுகிறார்.
    • நான் சுதந்திரமாக இருக்க விரும்பினாலும், எனது நிர்வாக விவகாரங்கள் அனைத்தையும் அவர் கட்டுப்படுத்துகிறார்.

    இந்தக் கூற்றுக்களில் குறைந்தபட்சம் ஒன்றேனும் அவரின் நடத்தைக்கு இசைவாக இருந்தால், நீங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீட்டுத் துஷ்பிரயோகத்தை அனுபவித்திருக்கலாம்.

  • உடல் ரீதியான மற்றும் பொருள் ரீதியான துஷ்பிரயோகம் பின்வரும் வடிவங்களில் நிகழ முடியும்:

    • பொருட்களை அப்புறப்படுத்துதல் அல்லது அழித்தல்
    • உங்களைக் குலுக்குதல்
    • ஒரு பொருளைக் கொண்டோ பொருளில்லாமலோ உங்களைத் தாக்குதல்
    • உங்களைக் கடித்தல்
    • உங்களை தீக்காயங்களிற்குள்ளாக்கல்
    • உங்களின் கழுத்தை நெரித்தல்
    • உங்களைத் தள்ளுதல் 
    • நீங்கள் சுதந்திரமாக நடமாடுவதைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல்
    • உங்களைச் சிறைப்படுத்தல்

    இந்தக் கூற்றுக்களை உங்களால் தொடர்புபடுத்த முடியுமா?

    • அவர் சில நேரங்களில் ஆக்ரோஷமாக மாறுகிறார் - அவர் பொருட்களை உடைக்க முடியும்.
    • அவர் என்னுடன் உடல் ரீதியாக வன்முறையில் ஈடுபட்டுள்ளார்- அவர் என்னை உடல் ரீதியாகக் காயப்படுத்தியுள்ளார்.
    • சில நேரங்களில் அவர் வன்முறையில் ஈடுபடுகிறார், ஆனால் அதை மன்னிக்குமாறும் மீண்டும் அதைச் செய்ய மாட்டேன் என்றும் அவர் உறுதியளிக்கிறார்.
    • அவர் என்னைப் போதைப்பொருளை அல்லது மதுவைப் பயன்படுத்தும்படி கட்டாயப்படுத்துகிறார்.
    • எனக்குத் தேவைப்படும்போது மருந்து சாப்பிடுவதிலிருந்து அல்லது மருத்துவரைப் பார்ப்பதிலிருந்து என்னைத் தடுக்க முயன்றிருக்கிறார்.

    இந்தக் கூற்றுக்களில் குறைந்தபட்சம் ஒன்றேனும் அவரின் நடத்தைக்கு இசைவாக இருந்தால், நீங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீட்டுத் துஷ்பிரயோகத்தை அனுபவித்திருக்கலாம்.

  • பாலியல் துஷ்பிரயோகம் பின்வரும் வடிவங்களை எடுக்க முடியும்:

    • உங்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது, அதாவது பாலியல் ரீதியாக அல்லது பாலியல் மொழி அல்லது நடத்தை மூலம் உங்களை மீண்டும் மீண்டும் அழைப்பது
    • உங்கள் மீது பாலியல் நடைமுறைகளைப் பலவந்தப்படுத்தல்
    • உங்களை உடலுறவு கொள்ள பலவந்தப்படுத்துதல்
    • பணத்திற்காக உங்களை மற்றவர்களுடன் உடலுறவு கொள்ள நிர்ப்பந்தித்தல்.

    இந்தக் கூற்றுக்களை உங்களால் தொடர்புபடுத்த முடியுமா?

    • நான் விரும்பாத விடயங்களைப் பாலியல் ரீதியாகச் செய்யும்படி என்னை வற்புறுத்துகிறார்
    • நான் விரும்பாத போது என்னை உடலுறவு மேற்கொள்ள வற்புறுத்துகிறார்.

    இந்தக் கூற்றுக்களில் குறைந்தபட்சம் ஒன்றேனும் அவரின் நடத்தைக்கு இசைவாக இருந்தால், நீங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீட்டுத் துஷ்பிரயோகத்தை அனுபவித்திருக்கலாம்.

  • ஆன்லைன் துஷ்பிரயோகம் பின்வரும் வடிவங்களில் நிகழ முடியும்:

    • டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் நகர்வுகளையும் உறவுகளையும் கண்காணித்தல்: தொலைபேசி, கணினி போன்றவை. 
    • குறுஞ்செய்திகள், அழைப்புகள் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் உங்களைத் துன்புறுத்தல். 
    • உங்களைப் பற்றிய தகவல்களை, புகைப்படங்களை அல்லது வீடியோக்களை ஆன்லைனில் வெளியிடுவதாகக் கூறி மிரட்டுதல்.

    இந்தக் கூற்றுக்களை உங்களால் தொடர்புபடுத்த முடியுமா?

    • அவர் என்னை குறுஞ்செய்திகள், அழைப்புகள் அல்லது ஆன்லைன் செய்திகள் மூலம் துன்புறுத்துகிறார்.
    • அவர் எனது தொலைபேசி, கணினி மற்றும் சமூக ஊடகங்களைச் சரிபார்க்கிறார். 
    • என்னைப் பற்றிய அந்தரங்கத் தகவல்களை வெளியிடுவதாக அவர் மிரட்டுகிறார்.
    • சமூக ஊடகங்களில் நான் என்ன இடுகையிட வேண்டும் என்று அவர் என்னிடம் கூறுகிறார்.

    இந்தக் கூற்றுக்களில் குறைந்தபட்சம் ஒன்றேனும் அவரின் நடத்தைக்கு இசைவாக இருந்தால், நீங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீட்டுத் துஷ்பிரயோகத்தை அனுபவித்திருக்கலாம்.

அது எப்போது நடக்கும்?

நெருக்கமான உறவைக் கொண்டிருந்த அல்லது கொண்டிருந்தவீட்டுத் துஷ் எந்தவொரு தம்பதியினரிடையேயும் பிரயோகம் ஏற்படலாம்: திருமண உறவு, சிவில் கூட்டாண்மை அல்லது ஒன்றிணைவு உறவு, ஒன்றாக அல்லது பிரிந்து வாழ்தல், உத்தியோகபூர்வமான அல்லது உத்தியோகபூர்வமற்ற உறவு.. 

உறவுமுறையின் எந்த நேரத்திலும், பிரிந்த பின்னரும் கூட, இது நிகழலாம். 

இருப்பினும், துஷ்பிரயோகம் வெளிப்படக்கூடிய அல்லது தீவிரமடையக்கூடிய சில நிலைமைகள் உள்ளன:

  • ஜோடி திருமணம் செய்து கொள்ளும்போது 
  • வீட்டை மாற்றுவது, குறிப்பாக வெளிநாட்டிற்கு இடம்பெயரும் போது
  • விரும்பியோ விரும்பாமலோ கர்ப்பம் தரிக்கும் போது, மற்றும் குழந்தை பிறந்த பிறகுள்ள வருடங்களில் 
  • குழந்தைகள் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் எடுக்கும் போது
  • பிரிவு மற்றும் அதைத் தொடர்ந்து வரும் காலம்.

புண்படுத்தக்கூடிய துணைவர் கட்டுப்பாட்டையும் ஆதிக்கத்தையும் இழக்கிறார்கள் என்று உணர்வது மிகவும் ஆபத்தான தருணங்களில் ஒன்றாகும், ​​பெரும்பாலும் தம்பதிகள் பிரிந்து செல்லும் போது இது நிகழ்கின்றது. உங்களை நன்கு தயார்படுத்திக் கொள்ளவும், உங்களுக்கு நெருக்கமானவர்களை எச்சரிக்கவும், வீட்டுத் துஷ்பிரயோகத்தில் நிபுணத்துவம் வாய்ந்த நிபுணர்களை உங்களைச் சுற்றிலும் வைத்திருக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. 

வயது, பின்னணி, தொழில் அல்லது நிதி நிலைமை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் யாருக்கும் துஷ்பிரயோகம் ஏற்படலாம். பொதுவான பாதிக்கப்பட்டவர் அல்லது துஷ்பிரயோகம் செய்பவர் என்று எவரும் இல்லை.  

பொதுவான தவறான கருத்துக்கள்

  • மோதல்/முரண்பாடு மற்றும் வீட்டுத் துஷ்பிரயோகம் ஆகியவற்றை வேறுபடுத்துவது முக்கியமானதாகும்:

    • உறவில் மோதல்கள் சகஜமானதாகும். ஏனென்றால்,இரு துணைவர்களும் சில விடயங்களில் எப்போதும் உடன்படுவதில்லை. இருப்பினும், இந்த நிலைமைகளில், ஒவ்வொருவரும் தங்கள் கருத்தைத் தெரிவிக்க முடியும், மேலும் சமரசத்தின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இது ஒரு சமமான உறவுமுறையாகும்.
    • குடும்ப துஷ்பிரயோகத்தின் தனிச்சிறப்பு ஒரு துணைவர் மற்றொருவரின் மீது ஆதிக்கம் செலுத்துவதாகும். துணைவர்கள் சமமான உறவுமுறையில் இல்லை. ஒருவர் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் ஒரு சார்புநிலையை உருவாக்குவதற்கும் ஒருவர் மற்றவர் மீது அதிகாரத்தைச் செலுத்துகிறார்.
    • ஒரு வாக்குவாதத்தில், உங்கள் துணைவர் இந்தத் தவறான நடத்தைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தினால், அது சாதாரண வாக்குவாதமாக இருக்காது, மாறாக அது வீட்டுத் துஷ்பிரயோகமாகும்.

    உங்களின் துணைவர் இந்த வகையான நடத்தைகளை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அல்லது வாக்குவாதங்களுக்கு வெளியேயும் தொடர்ந்து பின்பற்றினால்,இது வீட்டுத் துஷ்பிரயோகம் ஆகும்.

  • ஒரு புண்படுத்தக்கூடிய துணைவர் பொதுவாக உறவில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருப்பதன் மூலம் அதிகாரத்தை எடுத்துக்கொள்வார். அவர்கள் பெரும்பாலும் தங்களைச் சுற்றியுள்ளவர்களை முட்டாளாக்கக்கூடிய மிகவும் கைதேர்ந்த நபர்களாவர்.

    அவரை சரியான துணைக்காக அனுப்ப முடியும்: 

    • அவர் மிகவும் கவனத்துடன் இருப்பவராகக் காட்சியளிப்பதுடன் தனது துணைக்கு நிறைய உதவிகளை வழங்குகிறார்
    • அவரால் அவற்றை கவனத்துடன் வழங்க முடியும் 
    • அவர்கள் குறுகிய காலத்தில் அன்பு உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். 

    இவை உண்மையில் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வதற்கான உத்திகளாகும். பின்னர் அவர் தனது துணையைத் தங்களையே சந்தேகிக்க வைத்தும் தங்கள் மீதே நம்பிக்கையை இழக்க வைத்தும் தனிமைப்படுத்துவதில் வெற்றி பெறுகிறார். அவரின் துணை பின்னர் அவரையே சார்ந்து இருப்பார்.

  • இந்த வகையான துஷ்பிரயோகங்களில் ஒன்றை அவர் செய்தால் அது எந்த வகையிலும் உங்கள் தவறு அல்ல. துஷ்பிரயோகத்திற்கு எந்த நியாயமும் சாக்குப் போக்கு இருக்க முடியாது.

    நெருக்கமான உறவுக்கு வெளியே, வீட்டுத் துஷ்பிரயோகம் செய்பவர்கள் பெரும்பாலும் வசீகரமாகவும், தாராளமாகவும், மரியாதையுடனும் தோன்றுகிறார்கள். ஆனால் அவர்களின் நெருக்கமான உறவில் அவர்கள் உண்மையில் யார் என்பதை இது பிரதிபலிக்கமாட்டாது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களைக் ஏமாற்றுகிறார்கள்., குறிப்பாக அவ்வாறு செய்வதில் அவர்கள் கைதேந்தவர்களாவர்.

  • இது எந்த வகையிலும் உங்கள் தவறல்ல. 

    பெண்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை புண்படுத்தக்கூடிய துணைவர் கிடைப்பது மிகவும் பொதுவானதாகும். 

    மூன்று பெண்களில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் வீட்டுத் துஷ்பிரயோகத்தை எதிர்கொள்ளும் அளவிற்கு, நமது சமூகத்தில் ஆண்களின் வன்முறை மிகவும் அதிகமாக உள்ளது. அதாவது பல ஆண்கள் தங்கள் வாழ்நாளில் வீட்டுத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறார்கள்.

  • துரதிஷ்டவசமாக, உங்கள் துணைவர் மாறியிருக்க வாய்ப்பில்லை.

    வீட்டுத் துஷ்பிரயோகம் பெரும்பாலும் ஒரு சுழற்சியில் நிகழ்கிறது, இதில் நான்கு கட்டங்கள் மாறுகின்ற விகிதத்தில் ஒன்றையொன்று பின்தொடர்கின்றன, ஒவ்வொன்றும் துஷ்பிரயோகத்தை அனுபவிக்கும் துணைவர் மீது கட்டுப்பாட்டை அதிகரிக்கிறது:

    பதற்றம்

    • உங்கள் துணைவர் அதிகரித்த முறையில் பொறுமையற்றவர், சகிப்புத்தன்மையற்றவர் மற்றும்/அல்லது ஆக்ரோஷமானவர்.
    • இது உறவுக்குள் பதற்றம் மற்றும் பயம் போன்ற சூழலை உருவாக்குகிறது.
    • வன்முறை வெடிக்கும் என்று நீங்கள் கவலைப்பட்டு, அவரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சிக்கிறீர்கள்.
    • நீங்கள் என்ன சொல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கிறீர்கள்.

    வன்முறை நிகழ்வுகள்

    • உங்கள் துணைவர் உங்கள் மீது அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் உறுதிப்படுத்துகிறார்.
    • அவர் உங்களைக் கட்டுப்படுத்துகிறார், தீங்கு செய்கிறார் மற்றும்/அல்லது அவமானப்படுத்துகிறார்.
    • நீங்கள் வெவ்வேறு பாதுகாப்பு உத்திகளை பின்பற்றுகிறீர்கள்.

    நியாயப்படுத்துதல்

    • உங்களின் துணைவர் தனது வன்முறையை நியாயப்படுத்துவதற்கு வெளிப்புறக் காரணங்களைப் பயன்படுத்துகிறார்.
    • அவரின் நடத்தை முறையானது என்று உங்களை நம்ப வைக்க முயற்சிக்கிறார்.
    • என்ன நடந்தது என்பதன் தீவிரத்தை அவர் குறைக்கலாம்.
    • நீங்கள் அவரின் காரணங்களைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதுடன் அது உங்கள் தவறு என்று கூட நினைக்கலாம்.
    • உங்கள் அணுகுமுறையை மாற்றினால், அது மீண்டும் நடக்காது என்று நீங்கள் நம்புகிறீர்கள்.

    அமைதி

    • உங்கள் துணைவர் உறவைப் பேணவும், உங்கள் நம்பிக்கையை மீண்டும் பெறவும் விரும்புகிறார்.
    • வன்முறை குறைகிறது அல்லது மறைகிறது.
    • அவர் அக்கறையுடன் இருப்பதுடன் முயற்சி செய்வதாக உங்களை உணர வைக்கிறார்.
    • அவர் பாதிக்கப்படக்கூடியவராகத் தோன்ற முடியும்.
    • நீங்கள் காதலித்த நபரை மீண்டும் கண்டுபிடித்தது போல் உணர்கிறீர்கள்.
    • இந்தக் கால கட்டம் தொடரும் என்ற அல்லது உங்கள் துணைவர் மாறுவார் என்ற நம்பிக்கையில் நீங்கள் உங்கள் துணைவரைப் பற்றிய எதிர்பார்ப்புக்களை குறைத்துக்கொள்ள முடியும் அல்லது உங்கள் சொந்த நடத்தைகளையே மாற்றிக்கொள்ள முயற்சிக்கக் கூடும்.

    இந்தச் சுழற்சிகள் எவ்வளவு அதிகமாக மீண்டும் மீண்டும் நிகழ்கின்றனவோ, அந்தளவுக்கு அடிக்கடி இந்த காலகட்டங்கள் ஏற்படுவதுடன் அமைதியான காலகட்டங்கள் அரிதாகிவிடும். 

    படிப்படியாக, உங்கள் சகிப்புத்தன்மை அதிகரிப்பதுடன்,இது அன்றாடம் நடக்கும் துஷ்பிரயோகத்தைப் பார்ப்பதிலிருந்து உங்களைத் தடுக்கலாம்.  

  • அதற்கு நீங்கள் பொறுப்பல்ல. அவர் அதை நியாயப்படுத்தினாலும், உங்கள் துணைவர் அல்லது முன்னாள் துணைவர் மட்டுமே அவர் உங்களுக்கு ஏற்படுத்தும் வன்முறைக்கு பொறுப்புடையவராவார். 

    அவரின் நடத்தை சட்டவிரோதமானதும் சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டியதுமாகும். 

    துரதிஷ்டவசமாக, வீட்டுத் துஷ்பிரயோகம் மிகவும் பொதுவானது. மூன்று பெண்களில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் குறைந்தது ஆண்களின் வன்முறையின் ஏதேனும் ஒரு வடிவத்தை அனுபவிக்கிறார்.

உதவியை நாடுங்கள்

பிரான்சில், உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், நடைமுறைகளிலும் ஆவணங்களை தயார்படுத்துவதிலும் உங்களுக்கு உதவுவதற்கும் பல சேவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை.

  • இந்த தொலைபேசி ஆலோசனைச் சேவையானது அனைத்து வகையான வன்முறைகளையும் எதிர்கொள்பவர்களுக்காகவும் அவர்களை ஆதரிப்பவர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    • இந்த சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
    • தொலைபேசியில், பயிற்சி பெற்ற ஆலோசகர் உங்கள் பேச்சைக் கேட்டு உங்களுக்கு ஆதரவளிப்பார். அவர்கள் உங்களை அருகிலுள்ள தொடர்புடைய சேவைகளுக்கு உங்களை வழிநடத்த முடியும்.
    • கிடைக்கின்ற மொழிகள்: பிரெஞ்சு. சில வேளைகளில் பின்வரும் மொழிகளும் கிடைக்கின்றன: ஆங்கிலம், அரபு, ஸ்பானிஷ், துருக்கியம், மாண்டரின், சீனம், குர்திஷ், அஸெரி, போலிஷ், ஹீப்ரு, ஃபார்ஸி, சோனின்கே, கிரியோல், கின்யர்வாண்டா, கிருண்டி மற்றும் ஸ்வாஹிலி. தற்போது, துரதிஷ்டவசமாக ​​இந்த மொழிகள் ஒழுங்கற்ற மற்றும் திட்டமிடப்படாத நேரங்களில் கிடைக்கின்றன.
    • தொடர்பு கொள்ளவும்: 3919 க்கு அழையுங்கள, வாரத்தில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம். உங்கள் தொலைபேசி விலைப்பட்டியலில் இந்த அழைப்பு காட்டப்படமாட்டாது.
    • காது கேளாதவர்கள், செவித்திறன் குன்றியவர்கள், மூங்கையம்(Aphasia) அல்லது மொழிக் குறைபாடுகள் உள்ளவர்கள், http://www.solidaritefemmes.org என்ற இணையதளத்தின் கீழ் வலதுபுறத்தில் உள்ள தொலைபேசி ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சேவையை அணுகலாம்.
  • Centres d'Information sur les Droits des Femmes et des Familles (CIDFF)” ​​பொது மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, பின்வருவன போன்ற பல பகுதிகளில் உதவுகிறது: சட்ட உரிமைகள், சுகாதாரம், வேலைவாய்ப்புத் தேடல்கள், பயிற்சி, வணிக உருவாக்கம் மற்றும் குழந்தை பராமரிப்பு.

    • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
    • அவர்கள் உங்களின் உரிமைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க முடியும். சில மையங்கள் உங்களுக்கு நடைமுறைகளுடனும் ஆவணங்களுடனும் உதவ முடியும்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • தொடர்பு கொள்ளவும்: இந்தக் விவரப் புத்தகத்தில் , உங்கள் பகுதியில் உள்ள "CIDFF" இன் தொடர்பு விவரங்களைக் காணலாம்.
  • "Associations" என்பன பல்வேறு சேவைகளை வழங்கும் நிறுவனங்களாகும்.

    • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
    • வழங்கப்படும் சேவைகள் ஒரு "association" மற்றொரு சங்கத்திற்குக் குறிப்பிடத்தக்களவில் வேறுபடும். அவர்கள் உங்களுக்கு ஆலோசனைகளை வழங்கலாம் மற்றும் சில சமயங்களில் உங்களுக்கு நடைமுறைகளுக்கும் காகிதப் பணிகளுக்கும் உதவலாம்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • உங்கள் பிரெஞ்சுத் துறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், உங்களுக்கு அருகிலுள்ள வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் நிபுணத்துவம் பெற்ற “associations” பட்டியலை இந்தக் விவரப் புத்தகத்தில் காணலாம்.

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

நீங்களும் ஆர்வமாக இருக்கலாம்

வீட்டுத் துஷ்பிரயோகத்தை நீங்கள் கண்டால் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்

வீட்டுத் துஷ்பிரயோகம் என்பது தனிப்பட்ட விஷயமல்ல. வீட்டுத் துஷ்பிரயோகத்தை நீங்கள் கண்டிருந்தால்…

உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் வீட்டுத் துஷ்பிரயோகத்தின் தாக்கத்தைப் புரிந்துகொள்ளல்

வீட்டுத் துஷ்பிரயோகம் தீவிரமான சமூக, உடல் மற்றும் உளவியல் ரீதியான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த…

தாக்குதலின் போது உங்களைப் பாதுகாத்துக் கொள்ளல்

உங்கள் துணைவர் அல்லது முன்னாள் துணைவர் ஆக்ரோஷமாக நடக்க ஆரம்பித்தால், கூடிய விரைவில் பாதுகாப்பைப் பெற…

முன்னாள் துணைவர் உங்களை அணுகுவதிலிருந்து தடுப்பதற்கு ஒரு நீதிபதியிடம் வினவுதல்

நீங்களோ உங்கள் பிள்ளைகளோ மேலும் துஷ்பிரயோகத்தில் இருப்பதாக நீங்கள் எண்ணினால் பிரான்சு நீதி…

அவசர சேவைகளை அழைத்தல்: போலீஸ், ஆம்புலன்ஸ்

ஒரு அவசர நிலையில், காவல்துறைக்கு 17 அல்லது அவசர மருத்துவ சேவைகளுக்கு 112 ஐ அழைக்கவும். அவர்களின்…

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்