பிரான்சில் வாகனம் ஓட்டுதல்

நீங்கள் ஐரோப்பிய யூனியனுக்கு வெளியே ஓட்டுநர் உரிமத்தைப் பெற்று நிரந்தரமாக பிரான்சில் தங்கியிருந்தால், ஒரு பொதுவான விதியாக நீங்கள் அதை பிரெஞ்சு உரிமத்திற்கு மாற்ற வேண்டும். பல நாடுகள் பிரான்சுடன் பரிமாற்ற ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. உங்களிடம் உரிமம் இல்லையென்றால் அல்லது உங்களுடையதை மாற்ற முடியாவிட்டால், நீங்கள் பிரான்சில் ஓட்டுநர் சோதனையையும் மேற்கொள்ளலாம்.

17/05/2023 அன்று Women for Women France ஆல் உறுதிப்படுத்தப்பட்டது

வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்துடன் பிரான்சில் வாகனம் ஓட்டுதல்

வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்துடன் பிரான்சில் வாகனம் ஓட்டுவதற்கான நிபந்தனைகள் அதை வழங்கிய நாட்டைப் பொறுத்ததாகும். 

உங்கள் ஓட்டுநர் உரிமத்துடன் பிரான்சில் வாகனம் ஓட்ட முடியுமா என்பதையும் எந்த நிபந்தனைகளின் கீழ் நீங்கள் வாகனம் ஓட்ட முடியும் என்பதையும் கண்டறிய ஆன்லைன் பரீட்சித்தலை இயக்கலாம்.

எடுத்துக்காட்டாக, பின்வருவது இருந்தால் வெளிநாட்டு உரிமத்தைப் பரிமாற்றம் செய்யாமல் வாகனம் ஓட்டலாம்:

  • ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாட்டில் உங்கள் உரிமத்தைப் பெற்றிருந்தால்
  • அல்லது நீங்கள் பிரான்சில் படித்துக்கொண்டு “étudiant”, அல்லது மாணவர் என்ற சொல்லைத் தாங்கியவாறு வதிவிட அனுமதி அல்லது “titre de séjour” ஐ வைத்திருந்தால்.

உங்கள் வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தை மாற்றுதல்

நீங்கள் நிரந்தரமாக பிரான்சில் குடியேறி, ஐரோப்பிய நாடு அல்லாத நாட்டில் உங்கள் ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றிருந்தால், மிகவும் குறுகிய காலக்கெடுவுக்குள் பிரான்சில் வாகனம் ஓட்டுவதற்கு உங்கள் உரிமத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

  • பின்வரும் அனைத்து நிபந்தனைகளையும் நீங்கள் பூர்த்தி செய்தால், உங்கள் ஓட்டுநர் உரிமத்தை மாற்றிக்கொள்ளலாம்:

    • நீங்கள் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்கும் நாடு பிரான்சுடன் பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். இந்த நாடுகளின் பட்டியலை இந்த இணையத்தளத்தில் காணலாம்.
    • ஓட்டுநர் உரிமம் செல்லுபடியானதாக இருப்பதுடன் நீங்கள் வழக்கமாக வசிக்கும் நாட்டால் வழங்கப்பட வேண்டும், அதாவது அங்கே நீங்கள் வருடத்திற்குக் குறைந்தது ஆறு மாதங்களாவது தங்கியிருத்தல் வேண்டும். 
    • நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமகனாக இல்லாவிட்டால், நீங்கள் பிரான்சில் தங்குவதற்கு அதிகாரமளிக்கும் ஆவணத்தை வைத்திருக்க வேண்டும், இது வதிவிடஅனுமதி அல்லது “titre de séjour” என அறியப்படுகிறது. 

    இது உங்களுக்குப் பொருந்துமா என்பதை அறிய, இந்த இணையதளத்தில் நீங்கள் பரீட்சித்துக் கொள்ளலாம்.

  • உங்கள் தேசியத்தைப் பொறுத்துக் காலக்கெடு மாறுபடும்:

    • நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளிலொன்றின் குடிமகனாக இருந்தால், நீங்கள் பிரான்சுக்கு வந்ததைத் தொடர்ந்து 6வது மற்றும் 18வது மாதங்களுக்கு இடையில் பரிமாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    • நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள ஒரு நாட்டின் குடிமகனாக இருந்தால்,உங்களின் முதல் வதிவிட அனுமதி அல்லது“titre de séjour” செல்லுபடியாகும் திகதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • ஓட்டுநர் உரிமப் பரிமாற்றத்திற்கு விண்ணப்பிப்பதற்கு, உங்களுக்குப் பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும்:

    • உங்கள் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு போன்ற அடையாள ஆவணம்
    • வாடகை ரசீது, எரிவாயு அல்லது மின்சாரக் கட்டணம் அல்லது தங்குமிடச் சான்றிதழ் போன்ற ஆறு மாதங்களுக்கும் குறைவான “justificatif de domicile” அல்லது வதிவிடச் சான்று என அறியப்படும் உங்கள் முகவரியை நிரூபிக்கும் ஆவணம்.
    • உங்கள் பிறப்புச் சான்றிதழின் முழு நகல்
    • உங்கள் ஓட்டுநர் உரிமம்.

    உங்கள் ஆவணங்கள் பிரெஞ்சு மொழியில் இல்லை என்றால், அவை முதலில் ஒரு சத்தியப்பிரமாண மொழிபெயர்ப்பாளர் அல்லது “traducteur assermenté” ஆல் மொழிபெயர்க்கப்பட வேண்டும்:

    • ஒரு பக்கத்திற்குச் சராசரியாக மொழிபெயர்ப்பு 30-80 யூரோக்கள் செலவாகும்.
    • நீங்கள் உங்கள் மொழியில் உள்ள “traducteurs assermentés” பட்டியலை பிரான்சில் உள்ள உங்கள் நாட்டின் தூதரகத்திடம் கேட்கலாம் அல்லது ஆன்லைனில் தேடலாம். நீங்கள் பிரான்சில் அரசியல் அகதியாக இருந்தால், உங்கள் சொந்த நாட்டின் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளக் கூடாது. அதற்குப் பதிலாக, அகதிகளின் உரிமைகளில் நிபுணத்துவம் பெற்ற “association” எனப்படும் இலவச சேவைகளை வழங்கும் அமைப்பொன்றை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

    தேவையான தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் புகைப்படமும் உங்களுக்குத் தேவைப்படும். உங்களுக்கு மின்-புகைப்படக் குறியீட்டை வழங்குகின்ற அங்கீகாரம் பெற்ற புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட புகைப்படமொன்றை வைத்திருப்பது பரிந்துரைக்கப்படுகிறது.

  • பின்வரும் படிகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்த இணையத்தளத்தில் நடைமுறைகள் ஆன்லைனில் மேற்கொள்ளப்படுகின்றன:

    • ஒரு கணக்கை உருவாக்கி, உங்கள் சுயவிவரத்தில் உள்நுழைந்து, உங்கள் கோரிக்கைக்கான காரணத்தைத் தேர்வுசெய்யவும்.
    • கோரப்பட்ட தகவலுடன் படிவத்தைப் பூர்த்தி செய்து புகைப்படத்தையும் உங்கள் கையொப்பத்தையும் பதிவேற்றவும்.
    • உங்கள் கோரிக்கையை உறுதிப்படுத்தும் முன் கோரப்பட்ட பிற ஆவணங்களைப் பதிவேற்றவும்.

பிரான்சில் ஓட்டுநர் உரிமம் பெறுதல்

சில சந்தர்ப்பங்களில், பிரான்சில் உங்கள் ஓட்டுநர் சோதனையை நீங்கள் எடுக்க வேண்டும் அல்லது மீண்டும் எடுக்க வேண்டும். 

பிரெஞ்சு ஓட்டுநர் சோதனையில் பின்வருவன அடங்கும்:

  • நெடுஞ்சாலைக் குறியீடு பற்றிய உங்கள் அறிவைச் சோதிக்கும் ஒரு கோட்பாட்டுச் சோதனை. முதலில் இதில் சித்தியடைதல் வேண்டும் இந்தச் சோதனைக்குப் பதிவு செய்வதற்கு 30 யூரோக்கள் செலவாகும்.
  • கோட்பாட்டுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஐந்து ஆண்டுகளுக்குள் எடுக்கக்கூடிய ஒரு நடைமுறைச் சோதனை. இந்தச் சோதனைக்குப் பதிவு செய்வது செய்வது இலவசமாகும்.

நீங்கள் பிரெஞ்சு மொழி பேசவில்லை என்றால், சோதனையின் இரு பகுதிகளுக்கும் உரைபெயர்ப்பாளரால் உங்களுக்கு உதவ முடியும்.

  • ஆரம்பிப்பதற்கு, உங்களுக்கு அருகிலுள்ள “auto-école” அல்லது ஓட்டுநர் பள்ளி என்றழைக்கப்படுகின்ற ஓட்டுநர் சோதனைக்கு ஆட்களைத் தயார்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமொன்றைத் தொடர்புகொள்ளவும். நீங்கள் ஒன்றை ஆன்லைனில் தேடலாம்; எடுத்துக்காட்டாக, Google வரைபடத்தில், அது பெற்ற மதிப்புரைகளைப் பரிசீலிக்க உங்களை அனுமதிக்கும். 

    ஓட்டுநர் பள்ளி, நீங்கள் எடுக்க வேண்டிய படிகள் மற்றும் வழங்க வேண்டிய ஆவணங்கள் என்பவற்றை உங்களுக்குத் தெரிவிக்கும். 

    இதற்கான கட்டணங்களை விவரிக்கும் விலைப்பட்டியலை அவர்கள் உங்களுக்கு வழங்குவார்கள்: 

    • கோட்பாட்டுச் சோதனைத் தயாரிப்புப் பாடநெறிகள், நீங்கள் அவற்றை எடுக்க விரும்பினால். தயாரிப்புப் பாடநெறியைச் செய்யாமலேயே தேர்வில் அமர்வதையும் நீங்கள் தேர்வு செய்யலாம், ஆனால் அது பரிந்துரைக்கப்படவில்லை.
    • உங்கள் மட்டத்தைப் பொறுத்து நீங்கள் எடுக்க வேண்டிய ஓட்டுநர் பாடநெறிகள்:
      • உங்களிடம் ஏற்கனவே வெளிநாட்டு உரிமம் இருந்தால், நீங்கள் ஓட்டுநர் பாடநெறிகளை எடுக்க வேண்டிய அவசியமில்லை. இது மற்றவற்றுடன், உங்களுக்கு வழங்கிய நாட்டைப் பொறுத்ததாகும்.
      • நீங்கள் இதற்கு முன் வாகனம் ஓட்டவில்லை என்றால், சோதனைக்கு முன், வழக்கமாக 20-30 மணிநேரம் ஓட்டுநர் பயிற்சி எடுக்க வேண்டும்.

    உங்களுக்குப் பிரெஞ்சு மொழி சரியாகத் தெரியவில்லை என்றால், சோதனையின் போது உரைபெயர்ப்பாளரின் உதவியைப் பெற நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களிடம் கேட்கவும்.

  • உரிமம் பெறுவதற்குச் சில நிபந்தனைகளின் கீழ் நிதி உதவி கிடைக்கின்றது. இதன் மூலம் நீங்கள் பயனடைய முடியுமா என்பதை அறிய இந்த இணையத்தளத்தில் நீங்கள் ஒரு பரீட்சித்தலை இயக்கலாம்.

உதவியை நாடுங்கள்

பிரான்சில், உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், நடைமுறைகளிலும் ஆவணங்களை தயார்படுத்துவதிலும் உங்களுக்கு உதவுவதற்கும் பல சேவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை.

  • "PIMMS Médiation” என்பது பல பகுதிகளில் நிர்வாக நடைமுறைகளை தெரிவிக்கின்ற, வழிகாட்டுகின்ற அல்லது ஆதரிக்கின்ற அமைப்புகளாகும்: பொதுச் சேவைகளுக்கான அணுகல், உடல்நலக் கவனிப்பிற்கான அணுகல், மாநில நிதி உதவிக்கான விண்ணப்பங்கள், வரி அறிவிப்புகள், “France Travail” இற்கான அறிவிப்புகள் போன்றவை.

    • இந்தச் சேவையை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • தொடர்பு கொள்ளவும்: இந்தக் கோப்பகத்தில் உங்களுக்கு அருகிலுள்ள ஒரு “PIMMS Médiation” ஐ நீங்கள் கண்டறியலாம்.
  • சமூக சேவகர்கள் அல்லது “travailleurs sociaux” மற்றும் “assistants sociaux” என்பவர்கள், மக்களுக்கு அவர்களின் நிர்வாக நடைமுறைகளில் ஆதரவளித்து, அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கு ஏற்ப தீர்வுகளைக் கண்டறிய உதவும் தொழில் வல்லுநர்கள் ஆவர்.

    • இந்தச் சேவைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
    • உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனையைப் பெறுவதற்கும் அடுத்த படிமுறைகளில் உதவியைப் பெறுவதற்கும் நீங்கள் ஒரு சந்திப்பை மேற்கொள்ளலாம், உதாரணமாக: மாநில நிதி உதவிக்கான விண்ணப்பங்கள், சமூக வீட்டுவசதிக்கான விண்ணப்பங்கள், பிரெஞ்சு வேலையின்மை அலுவலகமான “France Travail” இல் பதிவு செய்தல் போன்றவை.
    • கிடைக்கின்ற மொழிகள்: பிரதானமாக பிரெஞ்சு மொழி.
    • தொடர்பு கொள்ளவும்: நீங்கள் “travailleur social” உடன் சந்திப்பொன்றைக் கோரலாம்: 

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

நீங்களும் ஆர்வமாக இருக்கலாம்

பிரான்சில் வேலை தேடுவது, தொழிற்பயிற்சி பெறுவது

நீங்கள் வளராத ஒரு நாட்டில் வேலை தேடுவது கடினமானதாகத் தோன்றலாம், குறிப்பாக நீங்கள் மொழி பேசவில்லை…

பிரான்சில் எளிமைப்படுத்தப்பட்ட அந்தஸ்துடன் தனிப்பட்ட வணிகத்தை உருவாக்குதல்

உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை பிரான்சில் விற்க விரும்பினால், “micro-entreprise” என்று…

அரச நிதி உதவியை கோருதல்

வரையறுக்கப்பட்ட நிதி வளங்களைக் கொண்ட மக்களுக்கு உதவ பிரெஞ்சு பொது அமைப்புகளால் பல வகையான நிதி…

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்