வீட்டுத் துஷ்பிரயோகத்தை நீங்கள் கண்டால் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்

வீட்டுத் துஷ்பிரயோகம் என்பது தனிப்பட்ட விஷயமல்ல. வீட்டுத் துஷ்பிரயோகத்தை நீங்கள் கண்டிருந்தால் அல்லது பாதிக்கப்பட்ட ஒருவர் உங்களிடம் நம்பிக்கை வைத்திருந்தால், உங்கள் ஆதரவு அவரின் உயிரைக் காப்பாற்றலாம். அவசர நிலைகளில், 17 என்ற இலக்கத்தின் ஊடாக இல் போலீஸை அழைக்கவும் அல்லது 114 இற்கு SMS அனுப்பவும்.

17/09/2023 அன்று பெண்களுக்காக Women France ஆல் உறுதிப்படுத்தப்பட்டது

அவசரகால நிலைமைகளில்

ஒரு தீவிரமான மற்றும் உடனடியான அச்சுறுத்தல் இருப்பதாக நீங்கள் நினைத்தால், உங்களுக்கு அது நிச்சயமாகத் தெரியாவிட்டாலும், 17 என்ற இலக்கத்தின் ஊடாக பொலிஸாரை அழைக்கவும். 

துஷ்பிரயோகத்தை நிறுத்துவதில் நீங்கள் பாதுகாப்பை உணர்ந்தால், கீழ்கண்டவாறு தலையிடவும்:

  • முடிந்தவரை அமைதியாக இருங்கள்
  • ஏனைய சாட்சிகளின் ஆதரவைத் திரட்டுங்கள் 
  • சாத்தியமெனில், குற்றவாளியின் கவனத்தைத் திருப்புவதற்கு ஒரு திசைதிருப்பலை உருவாக்கவும்.

உங்கள் பதில் அச்சுறுத்தலுக்கு ஏற்ற விகிதத்தில் இருக்க வேண்டும்: ஒரு ஆக்ரோஷமான தலையீடு துஷ்பிரயோகத்தின் அதிகரிப்புக்கு வழிவகுக்கலாம் என்பதுடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஆபத்தில் ஆழ்த்தலாம்.

அவசரமற்ற நிலைமைகளில்

வீட்டுத் துஷ்பிரயோகத்தை அனுபவிக்கும் மக்கள் பெரும்பாலும் அனைத்தையும் இழந்தவர்களாகவும் தனிமைப்படுத்தப்பட்டவர்களாகவும் உணர்கிறார்கள். உங்களின் ஆதரவு அவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியும்.

வீட்டுத் துஷ்பிரயோகத்திற்கு ஒவ்வொருவரும் வேறுபட்ட விதங்களில் நடந்துகொள்கிறார்கள். அதிர்ச்சிக்கான அனைத்து எதிர்வினைகளும் இயல்பானவை: மறுப்பு, கோபம், மௌனம், துன்பம், அழுகை, கூச்சல், போன்றவற்றுடன் குற்றவாளியுடன் தொடர்பு கொள்ளுதல் கூட நிகழலாம்.

  • துஷ்பிரயோகத்தை நீங்கள் கண்டால், அதைப் புறக்கணிக்கத் தூண்டும் அளவிற்கு என்ன சொல்ல வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவது மிகவும் கடினமாக இருக்கும், . ஆனால் பாதிக்கப்பட்டவருக்காக அங்கே இருக்க வேண்டியது முற்றிலும் முக்கியமானதாகும் . 

    பின்வருவனவற்றைச் செய்வதன் மூலம், நீங்கள் அவர்களின் உயிரைக் காப்பாற்றலாம்:

    • அவர்கள் சொல்வதைக் கேளுங்கள், அவர்களை நம்புங்கள், அவர்களை ஆதரியுங்கள். அவர்கள் நலமாக இருக்கிறார்களா என்றும் அவர்களுக்காக உங்களால் ஏதாவது செய்ய முடியுமா என்றும் கேளுங்கள்.
    • அவர்களின் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் மீண்டும் பெறுவதற்கான தீர்வுகள் உள்ளன என்பதை அவர்களுக்கு உறுதியளிக்கவும். 
    • துஷ்பிரயோகத்திற்குப் பொறுப்பான ஒரே நபர் குற்றவாளி என்பதை விளக்குங்கள்.
    • அவர்கள் ஆபத்தில் இருப்பதாக உணர்ந்தால், 17 என்ற இலக்கத்திற்கு காவல்துறையை அழைக்கும்படி அறிவுறுத்துங்கள் அல்லது புகார் செய்ய அவர்களுடன் காவல் நிலையத்திற்குச் செல்லுங்கள்.
    • துஷ்பிரயோகம் எவ்வாறு செயற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கும் அவர்களின் உரிமைகளை அறிந்து கொள்வதற்கும் இந்த இணையத்தளம் போன்ற நம்பகமான தகவல் ஆதாரங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
    • அவர்கள் புகார் செய்ய முடிவு செய்யும் நாளில் பயனுள்ளதாக இருக்கும் எழுத்துப்பூர்வ சாட்சி அறிக்கையை வழங்கவும். 
    • பிரத்யேகமான உரையாடல் சேவையில் (பல மொழிகளில் கிடைக்கிறது) நீங்கள் ஆன்லைனில் வன்முறையைப் புகாரளிக்கலாம்.  
    • இரகசியமான மற்றும் பாதுகாப்பான ஆன்லைன் இடமான “Mémo de vie” இணையத்தளத்தில் நீங்கள் காணும் நிகழ்வுகளின் பதிவை நீங்கள் வைத்திருக்கலாம்.
    • அவர்களின் மதிப்புகள் மற்றும் கலாச்சார அல்லது மத விருப்பங்கள் என்பவற்றை மதிக்கவும்.
    • அவர்கள் தங்கள் சொந்தப் வேகத்தில் முடிவுகளை எடுக்கட்டும்.
    • அவர்களுக்கு பிரெஞ்சு மொழி பேசத் தெரியாமல், பிரெஞ்சு மொழியில் மட்டுமே கிடைக்கும் சேவையின் எண்ணையோ மின்னஞ்சல் முகவரியையோ நீங்கள் அவர்களுக்கு வழங்கியிருந்தால், இந்தச் சேவைகளைத் தொடர்புகொள்ள அவர்களுக்கு உதவுங்கள்.
  • நமது சமூகம் இப்போதுதான் வீட்டுத் துஷ்பிரயோகத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளது. நம் அனைவருக்கும் ஒரு பங்கு உள்ளது. 

    துஷ்பிரயோகத்தை அனுபவிக்கும் நபருடன் நம்பிக்கையின் உறவைப் பேணுவதற்கு சில மனப்பான்மைகளைத் தவிர்க்க வேண்டும் மற்றும் அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடாது:

    • துஷ்பிரயோகத்தின் யதார்த்தத்தைப் பற்றிக் கேள்வி கேட்காதீர்கள். துஷ்பிரயோகத்தை மறைக்க வேண்டாம். 
    • அவர்களை நியாயந்தீர்க்காதீர்கள் அல்லது அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர்களிடம் சொல்லாதீர்கள். அவர்கள் அநேகமாகக் குழப்பமாக உணர்கிறார்கள், அடுத்து என்ன செய்வது என்று தீர்மானிக்க அவர்களுக்கு நேரம் தேவைப்படுகின்றது. 
    • அவர்களின் துணைவரைப் பாதுகாக்கவோ அல்லது அவர்களுக்குச் சாக்குப்போக்குச் சொல்லவோ முயற்சிக்காதீர்கள்.
    • அவர்கள் தயாராக இல்லை என்று சொன்னால் அவர்களை எதையும் செய்ய வைக்காதீர்கள்.
    • உங்களுக்குத் தேர்ச்சி இல்லாத தலைப்பில் அறிவுரை கூறாதீர்கள். சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் என்பன தொடர்ந்து மாறுகின்றன, மேலும் சர்வதேச சிக்கல்களும் உள்ளன.
    • பாதிக்கப்பட்டவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதால், குற்றவாளியைத் தொடர்பு கொள்ளாதீர்கள். குற்றவாளி தங்களைப் பற்றி உங்களை நம்ப வைக்கும் திறன் கொண்டவரான இருப்பார்.
    • துஷ்பிரயோகத்தை அனுபவிக்கும் நபரின் அனுமதியின்றி யாருடனும் தகவலைப் பகிர வேண்டாம்,இவ்வாறு பகிர்வது அவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும்.
    • பிரான்சில் அவர்களின் கலாசார அல்லது மத விருப்பங்கள் பொதுவானவை அல்ல என்று அவர்களிடம் சொல்ல முயற்சிக்காதீர்கள்.
    • அவர்களுக்குப் பரிச்சயமில்லாத மொழியில் தங்களை வெளிப்படுத்துவதில் அவர்களுக்குச் சிரமம் இருந்தால் அவர்களை குறுக்கிடாதீர்கள்.
  • சில சந்தர்ப்பங்களில், நீங்கள் அறிந்த உண்மைகளை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும் என்று பிரெஞ்சு சட்டம் கோருகிறது:

    • ஒரு குற்றத்தைத் தடுக்கவோ அல்லது அதன் தாக்கத்தை மட்டுப்படுத்தவோ முடிந்தால், அல்லது குற்றவாளி தடுக்கக்கூடிய புதிய குற்றங்களைச் செய்ய வாய்ப்புள்ள நிலையில், குற்றத்தைப் புகாரளிக்காமல் இருப்பது சட்டவிரோதமானது (பொருந்தக்கூடிய சட்டம்: “Code pénal” பிரிவு 434-1)
    • ஆபத்தில் இருக்கும் நபருக்கு உதவி வழங்காதது சட்டவிரோதமானது, இது "non-assistance à personne en danger" என்றழைக்கப்படுகின்றது (பொருந்தக்கூடிய சட்டம்: "Code pénal" பிரிவு 223-6). 
    • வயது குறைந்த, நோய், அங்கவீனம், உடல் அல்லது மனநல குறைபாடு அல்லது கர்ப்பம் போன்றவற்றால் பாதிக்கப்படக்கூடிய ஒரு மைனருக்கு அல்லது எந்தவொரு நபருக்கும் எதிரான குற்றத்தைப் புகாரளிக்காதது சட்டவிரோதமானது (பொருந்தக்கூடிய சட்டம்: “Code pénal” பிரிவு 434-3).

உதவியை நாடுங்கள்

பிரான்சில், உங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும், நடைமுறைகளிலும் ஆவணங்களை தயார்படுத்துவதிலும் உங்களுக்கு உதவுவதற்கும் பல சேவைகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை.

  • இந்த தொலைபேசி ஆலோசனைச் சேவையானது அனைத்து வகையான வன்முறைகளையும் எதிர்கொள்பவர்களுக்காகவும் அவர்களை ஆதரிப்பவர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    • இந்த சேவையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
    • தொலைபேசியில், பயிற்சி பெற்ற ஆலோசகர் உங்கள் பேச்சைக் கேட்டு உங்களுக்கு ஆதரவளிப்பார். அவர்கள் உங்களை அருகிலுள்ள தொடர்புடைய சேவைகளுக்கு உங்களை வழிநடத்த முடியும்.
    • கிடைக்கின்ற மொழிகள்: பிரெஞ்சு. சில வேளைகளில் பின்வரும் மொழிகளும் கிடைக்கின்றன: ஆங்கிலம், அரபு, ஸ்பானிஷ், துருக்கியம், மாண்டரின், சீனம், குர்திஷ், அஸெரி, போலிஷ், ஹீப்ரு, ஃபார்ஸி, சோனின்கே, கிரியோல், கின்யர்வாண்டா, கிருண்டி மற்றும் ஸ்வாஹிலி. தற்போது, துரதிஷ்டவசமாக ​​இந்த மொழிகள் ஒழுங்கற்ற மற்றும் திட்டமிடப்படாத நேரங்களில் கிடைக்கின்றன.
    • தொடர்பு கொள்ளவும்: 3919 க்கு அழையுங்கள, வாரத்தில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம். உங்கள் தொலைபேசி விலைப்பட்டியலில் இந்த அழைப்பு காட்டப்படமாட்டாது.
    • காது கேளாதவர்கள், செவித்திறன் குன்றியவர்கள், மூங்கையம்(Aphasia) அல்லது மொழிக் குறைபாடுகள் உள்ளவர்கள், www.solidaritefemmes.org என்ற இணையதளத்தின் கீழ் வலதுபுறத்தில் உள்ள தொலைபேசி ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சேவையை அணுகலாம்.
  • பிரஞ்சு வதிவிட உரிமை இல்லாத மக்களுக்கும் கூட, அவர்களின் சூழ்நிலை என்னவாக இருந்தாலும், அனைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே காவல்துறையின் பணியாகும். ஒரு போலீஸ் அதிகாரி உங்களுக்கு வாரத்தில் 7 நாட்களும் 24 மணிநேரமும் ஆலோசனை வழங்கவும், உதவி வழங்கவும் முடியும். நீங்கள் நான்கு பிரதான வழிகளில் காவல்துறையை தொடர்பு கொள்ளலாம்:

    • தொலைபேசி மூலம்: இலவச எண் 17ஐ அழைக்கவும். கிடைக்கக்கூடிய மொழிகள்: உரை பெயர்ப்பு அனைத்து மொழிகளிலும் கிடைக்கப்பெறும்.
    • குறுந்தகவல் மூலம்: பிரஞ்சு மொழியில் 114 க்கு SMS அனுப்பவும், உங்கள் சரியான முகவரியைக் குறிப்பிடவும்.
    • ஆன்லைன் மூலம்: chat service. இந்தச் சேவை பல மொழிகளில் கிடைக்கிறது.
    • எந்தவொரு காவல் நிலையத்திற்கும் செல்லவும், அதாவது “commissariat de police” அல்லது “brigade de gendarmerie”. இந்த இணையத்தளத்தில்உங்களுக்கு அருகிலுள்ள காவல் நிலையத்தைத் தேடிப்பெறலாம். உங்களுக்குப் பிரஞ்சு மொழி தெரியாது என்றால், அவர்கள் ஒரு உரைபெயர்ப்பாளரைக் கண்டுபிடிக்க வேண்டும், இதற்குச் சிறிது காலம் எடுக்கலாம்.
  • பிரான்சில் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் உங்களுக்கு உதவ இரண்டு சேவைகள் உள்ளன. 

    ஆம்புலன்ஸ் சேவை “Service d’aide médicale urgente (SAMU)” என்றும் அவசர சேவைகள் “pompiers” என்றும் அழைக்கப்படுகின்றன. உங்களுக்கு அவசர மருத்துவக் கவனிப்புத் தேவைப்பட்டால், அவர்கள் உங்களுக்கு விரைவாக உதவலாம் மற்றும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு உங்களை அழைத்துச் செல்லலாம்.

    • உயிருக்கு ஆபத்தான அவசரநிலை ஏற்பட்டால், நீங்கள் மாநில சுகாதார காப்பீட்டில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை அல்லது இச் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு செல்லுபடியாகும் வதிவிட உரிமைகள் இருக்க வேண்டிய அவசியமில்லை.
    • அவசரநிலை அல்ல என்று அவர்கள் கருதுவதன் காரணமாகக் கட்டணங்கள் அறவிடப்பட்டால், இந்தக் கட்டணங்கள் உங்கள் மாநில மற்றும் தனியார் உடல்நலக் காப்பீட்டால் ஈடுசெய்யப்படும்.
    • கிடைக்கக்கூடிய மொழிகள்: உரை பெயர்ப்பு அனைத்து மொழிகளிலும் கிடைக்கப்பெறும்.
    • தொடர்பு கொள்ளவும்: 24/7 இல் இலவசமாகக் கிடைக்கக்கூடிய எண் 112ஐ அழைக்கவும்.

மிகவும் சரியானதும் இன்றுவரையிலுமான தகவலை உங்களுக்கு வழங்குவதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டாலும், இந்தப் பக்கம் சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனையை மாற்றும் நோக்கத்தில் இல்லை. சட்டங்களும் நடைமுறைகளும் தொடர்ந்து மாறுகின்றன, எனவே தகுதிவாய்ந்த நிபுணர்களை அணுகுவது முக்கியம்.

நீங்களும் ஆர்வமாக இருக்கலாம்

வீட்டுத் துஷ்பிரயோகத்தைப் புரிந்துகொள்ளல்

உங்களது துணைவரின் அல்லது முன்னைய துணைவரின் நடத்தை வழமையானதா என நீங்கள் ஆச்சரியப்படலாம். அல்லது…

உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் வீட்டுத் துஷ்பிரயோகத்தின் தாக்கத்தைப் புரிந்துகொள்ளல்

வீட்டுத் துஷ்பிரயோகம் தீவிரமான சமூக, உடல் மற்றும் உளவியல் ரீதியான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த…

பிரெஞ்சு நீதி அமைப்புக்கு வீட்டுத் துஷ்பிரயோகத்தைத் தெரிவித்தல்

பிரான்சில் வீட்டுத் துஷ்பிரயோகத்தை அனுபவித்த எவரும், வதிவிட உரிமைகள் இல்லாவிட்டாலும் கூட,…

பொலிஸாரின் தலையீட்டிற்காக:

மேல் செல்ல ஸ்க்ரோல் செய்யவும்